முதல் காரியம்...! சனாதன வாரியம்!: மனது வைக்குமா மத்திய அரசு?
லக்னோ: உ.பி.,யில் பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 13ம் தேதி துவங்கும் கும்ப மேளா இந்த ஆண்டு இன்னொரு வகையில் சிறப்பு பெறுகிறது. சனாதனத்திற்கு என தனி வாரியம் அமைக்கும் குரல் வலுப்பெறுகிறது.
வரும் ஜனவரி 26ம் தேதி திரிவேணி சங்கமத்தில் நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி சனாதன வாரியம் அமைக்குமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், ஹிந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியமாகிறது.
முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதைப் போல், ஹிந்துக்களுக்கு சனாதன வாரியம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. வக்பு வாரியம் 1913-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது, பின்னர் 1923-ம் ஆண்டு முசல்மான் வக்ப் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் 1954 மற்றும் 1995-ம் ஆண்டுகளிலும் சட்டம் திருத்தப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியம் இயங்கி வருகிறது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற வாதத்தை ஒரு தரப்பினர் முன் வைக்கின்றனர்.
முஸ்லிம்களின் சொத்துகளை காப்பதற்காகவும், பிரிவினையை உருவாக்குவதற்காகவும் வக்பு வாரியத்தை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அது இன்றைக்கும் நடைமுறையில் இருப்பதால் பலர் கேள்வி கேட்கின்றனர், அதற்கு பதில் சொல்லவேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
சனாதன வாரியத்தின் மூலம் இந்துக்களின் கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து ஹிந்துக்களே நிர்வகித்தால் அது ஹிந்துக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும். சனாதன வாரியம் என்று ஒன்று இருந்தால் தான் வக்பு வாரியம் பற்றிய கேள்வி எழாது என மத்திய அரசு நினைக்கலாம். அப்படி மத்திய அரசு நினைத்தால் சனாதன வாரியம் உருவாவது உறுதியாகி விடும்.