குற்றவாளிகளை 7 நாட்களாக பிடிக்காத போலீசார்; இது நாடா, சுடுகாடா? அன்புமணி ஆவேசம்
சென்னை: 'கள்ளக்குறிச்சி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிரம் காட்டவில்லை. 7 நாட்களாக குற்றவாளியை போலீசார் பிடிக்கவில்லை. இது நாடா, சுடுகாடா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: கள்ளக்குறிச்சி அருகே நிர்மலா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிரம் காட்டவில்லை. 7 நாட்களாக குற்றவாளியை போலீசார் பிடிக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு வேதனையான எடுத்துக்காட்டு நிர்மலாவின் படுகொலை ஆகும்.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடிய நிகழ்வுகளில் சில அறிவியல்ரீதியிலான ஆய்வுகளும், ஆதாரம் திரட்டும் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை திரட்டப்படவில்லை என்றால் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமாகி விடும். . குற்றவாளிகளை தப்ப வைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் தான் எழுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கொடியவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமும், வேதனையும் இன்னும் விலகவில்லை. அதற்குள்ளாக அதைவிட கொடிய நிகழ்வு சின்ன சேலத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையும், தமிழக அரசும் அதை மூடி மறைக்க முயல்வது வெட்கக் கேடான விஷயங்கள் ஆகும். இதற்காக அவை தலைகுனிய வேண்டும். இவற்றை வைத்து பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? என்ற ஐயம் தான் எழுகிறது.
தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், முறையே 4, 3 வயது கொண்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.