'100 நாட்கள் வேலை தருவதில்லை' ; கிராமசபை கூட்டத்தில் தொழிலாளர்கள் புகார்
அன்னுார்; '100 நாட்கள் வேலை தருவதில்லை,' என சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 2023 ஏப்., 1 முதல், 2024 மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் திட்டம்) செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021 வரை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூக தணிக்கை பொகலூர் ஊராட்சியில் கடந்த 23ம் தேதி துவங்கியது.
வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்தனர். வேலை அட்டை, வருகை பதிவேடு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து சமூகத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் பொகலூரில் நடந்தது. கூட்டத்தில் வட்டார வள அலுவலர் கனகராஜ் பேசுகையில், இந்த ஊராட்சியில், கடந்த நிதியாண்டில் 74 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 89 பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில் பிரதம மந்திரி திட்டத்தில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 100 நாள் வேலை திட்டத்தில், செய்த வேலையை விட கூடுதலாக 1,200 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதை அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும். பதிவேட்டில் அடித்தல், திருத்தல் உள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் தொழிலாளர்கள் பேசுகையில், 'அரசு இந்தத் திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக 100 நாள் வேலை தர வேண்டும். தர முடியா விட்டால் இழப்பீடு தரவேண்டும் என கூறியுள்ளது. ஆனால் எங்களுக்கு 70 அல்லது 80 நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை. வெளி தோட்டத்திலும் வேலை கிடைப்பதில்லை. எனவே அரசு அறிவித்தபடி 100 நாட்களும் வேலை தர வேண்டும்,' என்றனர்.
ஊராட்சி நிர்வாகிகள் பதிலளிக்கையில், 'வருகிற ஆண்டில் கண்டிப்பாக பதிவு செய்தவர்களுக்கு 100 நாள் வேலை அளிக்கப்படும்,' என்றனர்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி செயலர் சுரேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.