தமிழக அணி ரன் குவிப்பு: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில்
புனே: 'கூச் பெஹர் டிராபி' அரையிறுதியில் தமிழக அணியின் ராகவ் சதம் கடந்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'கூச் பெஹர் டிராபி' (4 நாள் போட்டி) தொடர் நடத்தப்படுகிறது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் மகாராஷ்டிரா, தமிழகம் அணிகள் விளையாடுகின்றன.
மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 306 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 163/3 ரன் எடுத்திருந்தது. ராகவ் (62) அவுட்டாகாமல் இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ராகவ் (182), முதல் தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அம்ப்ரிஷ் (81) அரைசதம் விளாசினார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தனர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 456 ரன் எடுத்திருந்தது. மகாராஷ்டிரா சார்பில் யோகேஷ் சவான் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இப்போட்டி 'டிரா'வில் முடிய அதிக வாய்ப்பு இருப்பதால், முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தமிழக அணி பைனலுக்கு தகுதி பெறலாம்.