பெங்கால் அணி மீண்டும் வெற்றி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில்
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் கேப்டன் ருபிந்தர் பால் சிங் கைகொடுக்க பெங்கால் அணி 2-1 என கோனாசிகா அணியை வீழ்த்தியது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பெங்கால், கோனாசிகா (விசாகப்பட்டினம்) அணிகள் மோதின.
முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெங்கால் அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 32வது நிமிடத்தில் கோனாசிகா அணியின் மன்பிரீத் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
பின், 48வது நிமிடத்தில் பெங்கால் அணிக்கு கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் ருபிந்தர் பால் சிங், மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கோனாசிகா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்கால் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. டில்லிக்கு எதிரான முதல் போட்டியை 'டிரா' செய்த கோனாசிகா அணி, முதல் தோல்வியை பெற்றது.பெங்கால் அணி, தனது அடுத்த லீக் போட்டியில் டில்லி அணியை ஜன. 4ல் சந்திக்கிறது.