வங்கி நகைக்கடன் நடைமுறை மாற்றம்: விவசாயிகள் பாதிப்பு

புதுக்கோட்டை,: வங்கியில் அடகு வைக்கும் நகைகளுக்கு, அசலுடன் வட்டி செலுத்தும் முறையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வாங்கிய கடன்களுக்கு காலக்கெடு முடிவடையும் போது, அதற்கான வட்டியை செலுத்தி புதுப்பித்து, இதுவரை வட்டி கட்டி வந்துள்ளனர்.

ஆனால், ஆர்.பி.ஐ., புதிதாக விவசாயிகள் வாங்கிய நகை கடன்களை காலக்கெடு முடிந்த நிலையில், முழு அசலையும், வட்டியையும் செலுத்தினால் தான், புதிதாக நகைகளை அடகு வைக்க முடியும் என, புதிய சட்ட விதிகளை விதித்துள்ளது.

இதனால், சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய விவசாயிகளின் நகை ஏலத்தில் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், நகைகளை புதுப்பித்து, மறு அடகு வைக்க தனியார் நிதி நிறுவனங்களை விவசாயிகள் அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

விவசாயிகள் பாதிப்படையக்கூடிய இந்த உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி அதையே பின்பற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement