பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலியுறுத்தல்
பொள்ளாச்சி, ;பிளாஸ்டிக் ஒழிப்பு,துணிப்பை பயன்பாடு குறித்த வாசகங்களை, அரசின் அனைத்து ரசீதுகளிலும் குறிப்பிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், கடைகள், ஓட்டல்கள், காய்கறி சந்தைகள் உட்பட பிற இடங்களில் பயன்படுத்தினால் பறிமுதல் செய்ய வருவாய், உள்ளாட்சி மற்றும் போலீஸ் துறையினர் கொண்ட குழுக்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இக்குழுவினரின் செயல்பாடு, பெரும்பாலும் சுணக்கம் அடைந்தே காணப்படுகிறது. அவ்வபோது, நகராட்சி பகுதியில் மட்டுமே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
பேரூராட்சி, ஊராட்சிகளில், தொடக்கம் முதலே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும், அதன் பயன்பாடு மறைமுகமாக அதிகரித்தே காணப்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்தல், விற்பனை செய்தலை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைகளில் மறைமுகமாக இருப்பு வைத்து விற்பனை செய்வது தெரியவந்தால், அதிகப்பட்சமாக, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.
எனவே, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிகர்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து, முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி போன்ற அனைத்து ரசீதுகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகம் அச்சிட்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.