மின்கம்பம் உடைந்து ஊழியர் பலி இழப்பீடு கோரி உடலை பெற மறுப்பு

1

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லுார், சுகர்மில் காலனியில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு பழுதான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடும் பணி நடந்தது.

இதில் மின்வாரிய ஊழியர்களுடன் தற்காலிக பணியாளரான ஆலங்குளம் மருதம்புத்துாரைச் சேர்ந்த பத்ரகாளி, 52, என்பவரும் பணியாற்றினார். பழைய மின்கம்பம் திடீரென உடைந்து அருகில் நடப்பட்ட புதிய மின்கம்பம் மீது விழுந்ததில், இரண்டு சிமென்ட் மின்கம்பங்களும் விழுந்து உடைந்தன.

இதில் கீழே விழுந்த பத்ரகாளி இடுப்பு எலும்புகள் முறிந்தும், தலைக்காயம் ஏற்பட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஒரு மணி நேரம் அங்கேயே கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டு ஆட்டோவில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

அவர் தற்காலிக பணியாளர் என்பதால் அவருக்கு எந்த இழப்பீடும் அரசு சார்பில் வழங்கப்படாது என மின்வாரியம் கைவிரித்து விட்டது.

எனவே அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சி.ஐ.டி.யு., மின்வாரிய ஊழியர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை பெற மறுத்து விட்டனர்.

பத்ரகாளிக்கு மனைவியும் இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். அவர் கடந்த, 23 ஆண்டுகளாக மின்வாரிய பணியில் ஈடுபட்டார்.

Advertisement