'நம்மால் முடியும்' சங்கத்தால் குடியிருப்பு வளாகம் 'க்ளீன்'

சென்னை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எட்டு அடுக்கு கொண்ட குடியிருப்பில், 210 பிளாக்குகள் உள்ளன.

இரண்டு பிளாக்குகள் இடையே, 20 அடி அகலத்தில் காலி இடம் உள்ளது. இதை காற்றோட்ட வசதி, அவசர வழியாக பயன்படுத்த காலியாக விடப்பட்டுள்ளது.

இதில், மாடி வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக குப்பை கொட்டுவது, குழாய் உடைந்தால் கழிவுநீர் தேங்குவது என, சுகாதார சீர்கேடில் சிக்கியது.

இதையடுத்து, வாரியம், காவல் துறை இணைந்து வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்குள்ள, 18வது பிளாக் இடையே உள்ள காலி இடம், குப்பை, கழிவுநீரால் சுகாதார சீர்கேடாக இருந்தது.

இதை, அங்குள்ள 'நம்மால் முடியும்' என்ற நலச்சங்கம் சுத்தம் செய்து, கிரிக்கெட் விளையாடும் இடமாக மாற்றியது.

இனிமேல் குப்பை கொட்டாத வகையில், நலச்சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல, இதர பிளாக்குகளில் உள்ள காலி இடங்களையும் துாய்மையாக வைத்து, குழந்தைகள் விளையாட, படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாரியம் வலியுறுத்தி வருகிறது.

Advertisement