துணை சுகாதார நிலையத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
செங்கல்பட்டு:பொன்விளைந்தகளத்துாரில், துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் ஊராட்சியில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு பொன்விளைந்தகளத்துார், புன்னப்பட்டு, ஒத்திவாக்கம், உதயம்பாக்கம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டடவர்களுக்கு தடுப்பூசி, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கும், இங்கு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், தற்காலிகமாக ஊராட்சி இ- சேவை மைய கட்டடத்தில், துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
அதன் பின், துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மற்றும் கலெக்டருக்கு தீர்மானத்தை அனுப்பி உள்ளனர்.
இதுமட்டுமின்றி, கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டம், அமைச்சர் குறை தீர்க்கும் கூட்டங்களில், துணை சுகாதார நிலையத்திற்கு கட்டடம் கட்டித்தர கோரி, சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொன்விளைந்தகளத்துார் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.