'குடும்ப டாக்டர் முறை மீண்டும் வர வேண்டும்'
சென்னை,
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவ சேவை வழங்கி வரும் டாக்டர் சீனிவாசனின் சேவையை கவுரவித்து, 'டாக்டர் ஆப் டாக்டர்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
'மியூசிக் டெம்பிள்' மற்றும் 'அனுஷம் ஆர்ட்ஸ்' அகாடமி இணைந்து நடத்திய விழா, மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்., சபாவில் நேற்று நடந்தது. விழா துவக்கமாக, 98 வயதை கடந்த டாக்டர் சீனிவாசனுக்கு பாத பூஜை செய்யப்பட்டது.
டாக்டர் சீனிவாசனுக்கு, 'டாக்டர் ஆப் டாக்டர்ஸ் வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்கி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசுகையில், ''அனைவரும் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வேண்டும். பாத பூஜை செய்வது குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியோரை மதிக்கும் பண்புகள் குறித்து, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பேசுகையில், ''தற்போது குடும்ப டாக்டர் முறை இல்லாமல் போய், அனைத்துக்கும் தனித்தனி டாக்டர் என்ற நடைமுறை வந்து விட்டது. குடும்ப டாக்டர் முறை இருந்தால், 100 வயது வரை வாழலாம் என்பது என் நம்பிக்கை,'' என்றார்.
சாஸ்த்ரா பல்கலை இயக்குனர் சுதா சேஷய்யன் பேசுகையில், ''இன்னும் கூட, 'பப்ளிக் ஹெல்த் சென்டர்' நடந்து வருகிறது என்றால், அதற்காக டாக்டர் சீனிவாசன் செய்த தியாகங்கள் எண்ணற்றவை. மீண்டும் குடும்ப டாக்டர் முறையை கொண்டுவர முன்னெடுப்புகள் நடக்கின்றன.
''இதை செயல்படுத்துவது தான், டாக்டர் சீனிவாசனுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்,'' என்றார்.
பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த், டாக்டர் சீனிவாசன் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.