பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி வரும் 4ல் நடக்கிறது

உடுமலை, ;அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி ஜன., 4ம் தேதி நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் சைக்கிள் போட்டிகள், வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டிலும், ஜன., 4ம்தேதி சிக்கன்னா அரசு கலைக்கல்லுாரியில் காலை, 6:00 மணிக்கு நடக்கிறது.

போட்டி, 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடக்கிறது.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், சைக்கிள் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுகிறது. அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் பயன்படுத்தக்கூடாது.

போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, மாணவர்கள் அரங்கத்தில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான வயது சான்றிதழ் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று வர வேண்டும்.

ஆதார் அட்டை நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் ஏற்படும் விபத்துகளுக்கு போட்டியாளர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். போட்டி நடக்கும் தடம் குறித்து ஜன., 4ம்தேதி தெரிவிக்கப்படும்.

13 வயது பிரிவில் மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவியருக்கு 10 கி.மீ, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவியருக்கு 15 கி.மீ சைக்கிள் ஓட்டுவதற்கான துாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மூவாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. நான்கு முதல் பத்து இடங்களுக்கு தலா, 250 ரூபாய் வழங்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு, திருப்பூர் மாவட்ட விளையாட்டு துறை அலுவலகத்தில் 0421 2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement