அமெரிக்க முன்னாள் அதிபர் கார்ட்டர் மரணம்

வாஷிங்டன், அமெரிக்காவின் 39வது அதிபராக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர், 100, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்தியாவின் நண்பர் என்று போற்றப்படும் அவரது பெயரில், ஹரியானாவில் ஒரு கிராமம் உள்ளது.

அமெரிக்காவின் அதிபராக 1977 - 1981ல் பதவி வகித்தவர், ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்ட்டர். இவர் ஜார்ஜியா கவர்னர், எம்.பி., என, பல பதவிகளை வகித்தவர். அதிபர் பதவியில் இருந்து விலகிய பின், சமூக தொண்டு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் நேற்று காலமானதாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துஉள்ளனர். அமெரிக்காவின் நீண்ட காலம் வாழ்ந்த அதிபராக அவர் அறியப்படுகிறார்.

அவருக்கு நான்கு குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள், 14 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ரோசலின் மற்றும் ஒரு பேரக் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டனர்.

ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு அதிபர் ஜோ பைடன், அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நண்பராக கார்ட்டர் அறியப்படுகிறார். எமர்ஜென்சிக்குப் பின் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வென்ற பின், 1978ல் அவர் இந்தியாவுக்கு பயணம் செய்தார்.

பார்லிமென்டில் பேசியபோது, அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதை கடுமையாக விமர்சித்து பேசினார்.

ஜிம்மி கார்ட்டரின் தாய், 1960களில் டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானாவின் தவுலத்புர் நசீராபாத் என்ற கிராமத்தில், அமைதிக் குழுவின் சுகாதாரத் தொண்டராக பணியாற்றியுள்ளார். தன் இந்திய பயணத்தின்போது, அந்த கிராமத்துக்கு தன் மனைவியுடன் ஜிம்மி கார்ட்டர் சென்றார்.

கிராம மக்களுடன் மிகவும் பாசத்துடன் அவர் பழகினார். இதையடுத்து, அந்த கிராமத்துக்கு கார்ட்டர்புரி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகும், அந்த கிராமத்துடன் தொடர்ந்து அவர் தொடர்பில் இருந்தார்.

Advertisement