ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் ஆம்புலன்ஸ் மீது விறகு ஏற்றி வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்தவர் வருசைகனி 65. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்சில் அவரது மகள் அனீஸ் பாத்திமா 40, மருமகன் ஜாபர் சாதிக் 47, உறவினர்கள் ஹர்ஷத் 45, கதீஜா ராணி 40, ஆயிஷாபேகம் 35, செய்யத் அர்ஷத் ரகுமான் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தனர்.

இரவு 11:30 மணிக்குராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே வந்த போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் விறகு ஏற்றி வந்த லாரி டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியது.

அப்போது ஆம்புலன்ஸ் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் அருகே அமர்ந்திருந்த ஜாபர் சாதிக், மற்றும் வருசை கனி, அனிஸ் பாத்திமா பலியாகினர். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.

படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ரியாஸ்கான், ஆயிஷா பேகம், கதிஜா ராணி, ஹர்ஷத், செய்யது அர்ஷத் ரகுமான் ஆகியோரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வேறு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

அங்கு அதே நேரத்தில் தீ விபத்தால் நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு புகை மண்டலமாக இருந்தது. இதையடுத்து ரியாஸ்கான் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தின் போது ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ், கார் அடுத்தடுத்து மோதியதில் காரில் வந்த 2 பேர் லேசான காயமடைந்தனர். ராமநாதபுரம் அருகே சுப்புதேவன் வலசையை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் 48, மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Advertisement