காலாவதியான தீயணைப்பான் கருவி ஏர்போர்ட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு
சென்னை,
பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய வளாகங்கள், அலுவலகங்கள் என, பல இடங்களில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய தீயணைப்பான் கருவிகள் இருக்கும். எதிர்பாராத விதமாக தீப்பிடித்தால் இவற்றை வைத்து தீயை அணைக்கலாம்.
ஆனால், சென்னை விமான நிலைய முனையங்களில் காலாவதியான தீயணைப்பான் கருவிகள் செயல்பாட்டில் இருப்பதாக, பயணியர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பயணி ஒருவரின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்தேன். வருகை முனையத்தில் 5 கிலோ எடை தீயணைப்பான் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
ஐ.எஸ்., 2190 தரம் விதிமுறைகளின்படி அவை, 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், இங்கு சில தீயணைப்பான் கருவிகள், இன்னமும் செயல்பாட்டில் உள்ளன. இவை பயணியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சென்னை விமான நிலைய அதிகாரிகள், 'நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
'குறிப்பிட்டுள்ள பழைய தீயணைப்பான் கருவிகளை, கடந்த 30ம் தேதியே மாற்றிவிட்டோம். தற்போது, விதிமுறைகளின் படி உள்ள கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன' என, பதில் அளித்துள்ளனர்.