தோட்ட தொழிலாளர்கள் இடையே குறைந்து வரும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

மூணாறு : மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இடையே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் பல தலைமுறைகளாக தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஆரம்ப காலத்தில் தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்களின் சில பழக்க, வழக்கங்களை தொன்று தொட்டு கடை பிடித்தனர். அதன்படி ஆங்கில புத்தாண்டு வினோதமாக கொண்டாடினர்.

புத்தாண்டு அன்று தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் தோட்டங்களை நிர்வாகிக்கும் அதிகாரிகளை புத்தாண்டு நாளில் அதிகாலை பழ வகைகள், கேக் உள்பட இனிப்பு வகையுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டனர். அதனால் நகரில் பழம், பூ, மாலை, கேக் ஆகியவற்றின் தற்காலிக கடைகள் ஏராளம் முளைக்கும்.

குறைவு: தேயிலை தோட்டங்களில் 45 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்த நிலையில் விருப்ப ஓய்வு உள்பட பல்வேறு காரணங்களால் தற்போது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

தவிர தற்போதுள்ள தலைமுறையினர் அந்த வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர். அதனால் தொழிலாளர்கள் இடையே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் படிப்படியாக குறைந்து வருவதுடன், அதனை சார்ந்த வர்த்தகமும் நலிவடைந்து வருகிறது.

Advertisement