முதல்முறையாக அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர்சந்தைகளில் தனிக்கடைகள் வயல் முதல் சந்தை வரை விளைபொருட்களுக்கு மதிப்பு
மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு என தனியாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் அண்ணாநகர், சொக்கிகுளம், ஆனையூர், பழங்காநத்தம், மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டியில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் மதுரை மாவட்டத்தில் விளைவிக்கும் பொருட்களை விவசாயிகள் நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்கின்றனர். விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்பதோடு அவற்றை மதிப்பு கூட்டி விற்கும் வகையில் 500 முதல் 1000 விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை (எப்.பி.ஓ.) உருவாக்குகின்றனர்.
இந்நிறுவனத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை பெற்று மதிப்பு கூட்டி நுகர்வோருக்கு வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்கின்றன. மதுரையில் இதுபோன்ற 13 நிறுவனங்கள் உள்ள நிலையில் அவற்றின் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் உழவர் சந்தையில் விற்பதற்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வணிகத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: முதன்மை செயலர் பிரகாஷ் அறிவுறுத்தல்படி மாநிலத்தில் முதன்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அண்ணாநகர் உழவர் சந்தையில் திருமங்கலம் வேளாண்மை தோட்டக்கலை கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சொக்கிகுளம் உழவர் சந்தையில் டி.வாடிப்பட்டி ஒருங்கிணைந்த பண்ணைய முறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடைகள் திறக்கப்பட்டது. அரிசி, பருப்பு, பலசரக்கு, மளிகை பொருட்கள், மசாலாப்பொருட்கள், எண்ணெய் வகைகள் என வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. உழவர் சந்தை செயல்படும் நேரமான காலை 6:00 முதல் மதியம் ஒரு மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். நேற்று கடைகள் திறந்த 2 மணி நேரத்தில் மொத்தம் ரூ.6000க்கு விற்பனை நடந்தது மகிழ்ச்சியான விஷயம். பொதுமக்களின் நுகர்வுத் தன்மையை பொறுத்து பிற உழவர் சந்தைகளிலும் எப்.பி.ஓ., சார்பில் கடைகள் திறக்கப்படும் என்றார்.