தமிழக விவசாயிகளுக்கு அடையாள எண்: மத்திய அரசு உத்தரவுப்படி நடவடிக்கை

4



சென்னை: மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை துவங்க உள்ளது.


நாடு முழுவதும், 11.8 கோடி விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில், 80 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.


ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போர் பெரிய விவசாயிகள் என, வேளாண் துறையால் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மொபைல் செயலி



விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்குகின்றன.


மத்திய அரசு உத்தரவின்படி, விவசாயிகளின் பெயர், நிலங்கள் தொடர்பான விவரங்கள், ஏற்கனவே, 'கிரெய்ன்ஸ்' என்ற மொபைல் செயலி வழியே, பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதுதவிர, தமிழக வேளாண் துறை சார்பில், பயிர் சாகுபடி தொடர்பாக, விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.



இந்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு, அடையாள எண் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'பார்மர்ஸ் ரிஜிட்டரி' என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.


இதில் விவசாயிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள எண் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இது குறித்து, வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:



மத்திய அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு அடையாள எண் உருவாக்குவதற்கான பதிவு, இம்மாதம் நடக்க உள்ளது.



ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு தேதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்களில், வேளாண்துறை அலுவலர்கள் அங்கு செல்வர். அப்போது, விவசாயிகள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவுறுத்தல்



இது, ஒவ்வொரு விவசாயிக்கும், ஆதார் எண் போன்றது. இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில், விவசாயத்திற்கு தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.



வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கும், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களுக்கு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


கூடுதல் விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement