திருத்தேரியில் போக்குவரத்து சிக்னல் அமைப்பு

மறைமலைநகர், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இதில், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளில் இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.

இதையடுத்து, திருத்தேரி சந்திப்பில் போக்குவரத்து,'சிக்னல்' அமைக்க வேண்டும் என, சிங்கபெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்தாண்டு இதை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதையடுத்து, போக்குவரத்து காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு நிதியின் கீழ், 7 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, 'டெண்டர்' விடப்பட்ட நிலையில், சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட்டு, போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வரும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Advertisement