ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை
துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
பாப்பாரப்பட்டி, ஜன. 3-
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், 40 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. தொடர்ந்து பெய்து வந்த மழையால், ஏரி நிரம்பி தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள கிணறு, போர்வெல் ஆகியவற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால், ஏரியின் தண்ணீர் மட்டம் உடனடியாக குறைய வாய்ப்புள்ளது. இதை அகற்ற கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் மற்றும் கோரிக்கை மனு அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த ஏரி முழுவதும் தற்போது ஆகாய தாமரை செடி வளர்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகிறது.
மேலும், இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏரியில் இப்பகுதியை சேர்ந்த சிலர், இறைச்சி கழிவு மற்றும் வீடுகளில் சேகரிக்கும் குப்பை உள்ளிட்ட வீணாகும் கழிவையும் கொட்டுகின்றனர். இதனால், ஏரியின் துாய்மை மாசடைந்து வருகிறது. ஏரியை துாய்மையாக பராமரிக்கவும், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.