மதுபான கொள்கையில் மாற்றம் அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி : மதுபான கொள்கையில் மாற்றம் செய்தால் ஆண்டிற்கு ரூ. 750 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது; புதுச்சேரி வருவாய் உயர்த்த பல வழிகள் இருந்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதால் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்ந்து மாநில பொருளாதாரம் பாதிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஏன் சொத்து வரி வசூலிப்பதில்லை என ஆடிட்டிங் அப்ஜக் ஷன் தெரிவித்தும், கடந்த தி.மு.க., காங்., அரசும், தற்போதைய பா.ஜ., என்.ஆர்.காங்., அரசும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுபான கொள்கையில் மாற்றி மொத்த மதுபானங்களை அரசு கொள்முதல் செய்து தனியார் மதுபான கடைகளுக்கு வினியோகம் செய்தால் ஆண்டிற்கு ரூ. 750 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். மதுபானம் தயாரிக்கும் மூலப்பொருள் இ.என்.ஏ., புதுச்சேரியில் உற்பத்தி செய்வதில்லை. 30 லட்சம் லிட்டர் வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யும் இ.என்.ஏ.வுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 10 வரி விதித்தால் ஆண்டிற்கு ரூ. 40 கோடி வருவாய் கிடைக்கும்.
இதுபோல் பல வழிகள் இருந்தும் அதை சீர்துாக்கி பார்க்காமல், குப்பை வரி, மின்சார கட்டணம், பெட்ரோல் விலையை உயர்த்துவது சமானிய மக்களை பாதிக்கும்' என்றார்.