ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு கரணம் தப்பினால் மரணம்: நெடுஞ்சாலை ரோடுகளில் எங்கும் மெகா பள்ளம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய காவிரி குடிநீர் திட்டத்திற்காக நகர், புறநகர் ரோட்டோரங்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாகமூடப்படாததாலும், ராமேஸ்வரம்-ராமநாதபுரம் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் மழையால் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர்.

கரூர் மாவட்டம் நஞ்சைபுகளூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து 50 கி.மீ.,ல் உள்ள அரவக்குறிச்சில் 135 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்றம் செய்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இப்பணி ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.2819 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. வரும் ஏப்., மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ராமநாதபுரம்- பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் குழிதோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. தற்போது மழை பெய்து அவ்விடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குழாய்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் அப்படியே கிடக்கிறது.

அதே சமயம் ரோட்டோரத்தில் குழிகள் உள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதே போல நகர், புறநகர் பகுதிகளில் ரோட்டோரங்களில் குழி தோண்டி சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக ரோடுகள் சேதமடைந்துள்ளன.

எனவே குடிநீர் திட்டபணிக்காக தோண்டப்படும் குழிகளை முழுமையாக மூட வேண்டும். அதே நேரம் மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த ரோடுகளில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது.

இந்த ரோடுகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

Advertisement