வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை வடமாநில ஆசாமி கைது
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் எட்டு மாதங்களுக்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து, 18 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில், வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா,29, என்பதும், கடந்தாண்டு மே 16ம் தேதி நாச்சியார்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருவாசகம் மனைவி லட்சுமி ராணி, 38, என்பவரது வீட்டில், 18 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், கணேஷ் முண்டாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 2 கிராம தங்க நகையை பறிமுதல் செய்தனர்.