விழுப்புரத்தில் 'தினமலர்' கோலப்போட்டியால்... விழாக்கோலம்! பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்

விழுப்புரம் : தினமலர்' நாளிதழ் சார்பில், விழுப்புரத்தில் நடந்த மெகா கோலப் போட்டியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதனால், விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் விழாக்கோலம் பூண்டது.



மார்கழி மாதத்தில் பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 'மெகா' கோலப் போட்டி நடத்தி, சிறந்த கோலமிடும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்தாண்டு, சூப்பர் 'ருசி' பால் நிறுவனத்துடன் இணைந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், முதல் முறையாக 'மெகா' கோலப்போட்டியை நேற்று நடத்தியது.

பெண்கள் குவிந்தனர்



விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், அதிகாலை முதலே, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் குவியத் துவங்கினர்.

காலை 7:00 மணிக்கு போட்டி துவங்கிய நிலையில், பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5:00 மணி முதலே பெண்கள் அணி அணியாக திரண்டு வந்தனர்.

நடுவர் குழு திணறல்



புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் 'மெகா' கோலப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்கு 4க்கு 4 அடி இடம் ஒதுக்கப்பட்டது.

சரியாக 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, 8:00 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரத்தில், போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கை வண்ணங்களை வெளிப்படுத்தி அசத்தினர். இதனால், பெருந்திட்ட வளாக சாலைகள் வண்ணமயமாகவும், கோலாகலமாகவும் காட்சியளித்தன.



விழுப்புரம் மண்டல கூட்டுறவு இணைபதிவாளர் விஜயசக்தி, சரஸ்வதி கல்விக்குழும இயக்குனர் மஞ்சுளா, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி இணை செயலாளர் நிஷா செந்தில் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.

நுாற்றுக் கணக்கான சிறந்த கோலங்களில் பரிசுக்குரிய சிறந்த கோலங்களை தேர்ந்தெடுப்பதில் நடுவர் குழுவினர் திணறினர். அந்த அளவிற்கு அனைத்து கோலங்களும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் நடுவர் குழுவினர் இப்பணியை நிதானித்து சிறப்பாக செய்தனர்.

பரிசு மழையில்போட்டியாளர்கள்



புள்ளி, ரங்கோலி, டிசைன் என 3 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த முதல் மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு முதல் 3 பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் பழனி, முன்னாள் அமைச்சர் மஸ்தான், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர்.

மேலும், அடுத்தடுத்து இடங்களுக்கான போட்டியில் வென்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களும், 'தினமலர்' நாளிதழுடன் கோலப் போட்டியை இணைந்து வழங்கியவர்களும் பரிசு வழங்கினர்.

பரிசு வென்றவர்கள்



வானுார் ராவுத்தன் குப்பம் சங்கரி, விழுப்புரம் முத்தாம்பாளையம் எழில், விழுப்புரம் ராஜேஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷின் பெற்றனர். இரண்டாம் பரிசான 3 கிராம் தங்கக் காசு, தைலாபுரம் பொன்னம்மாள், விழுப்புரம் இளவேணி, வீரமூர் சரோஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசான பிரிட்ஜை, விழுப்புரம் பவித்ரா, விராட்டிக்குப்பம் ஜெயஸ்ரீ, வழுதரெட்டி பிரியங்கா ஆகியோர் பெற்றனர்.

மேலும், 4ம் பரிசாக எல்.இ.டி., 'டிவி', சத்திய மங்கலம் சகுந்தலா, விழுப்புரம் ஐஸ்வர்யா, திருவெண்ணெய்நல்லுார் லட்சுமி, 5ம் பரிசாக சைக்கிள் விழுப்புரம் பரணி, ரஞ்சனி, சுபா ஆகியோருக்கும், 6ம் பரிசாக 3 பேருக்கு டேபிள் டாப் கிரைண்டர், 7ம் பரிசாக 3 பேருக்கு மிக்ஸி, 8ம் பரிசாக 6 பேருக்கு காஸ் ஸ்டவ், 9ம் பரிசாக 9 பேருக்கு குக்கர், 10ம் பரிசாக 12 பேருக்கு வாட்ச், 11வது பரிசாக 18 பேருக்கு ஹாட் பாக்ஸ், 12 ம் பரிசாக 15 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, 13ம் பரிசாக 15 பேருக்கு தலா 5 லிட்டர் எஸ்.வி.எஸ். சமையல் எண்ணெய் உட்பட, மொத்தம் 111 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கவுரவிப்பு



மெகா கோலப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், சிறந்த கோலங்களை தேர்வு செய்த நடுவர்கள் அடங்கிய குழுவினர், இணைந்து வழங்கியவர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பரிசு



கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் சேலை, மளிகை பொருட்கள், 1 கிலோ அரிசி, சில்வர் டிபன் பாக்ஸ், குங்கும சிமிழ் செட், பேஸ் பவுடர், கன்யா ரமேஷ் காலண்டர், ராம் தங்க மாளிகை காலண்டர், சில்வர் டம்பளர், மெடிமிக்ஸ் சோப், துணி சோப், வாஷிங் லிக்விட், வாட்டர் பாட்டில், பென்சில் செட், பிளாஸ்டிக் விசிறி, அணில் சேமியா, அகர் பத்தி, லிவிங்ஸ்டா காபித்துாள், காய்கறி விதை பாக்கெட் உள்ளிட்ட 18 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்



'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட மெகா கோலப் போட்டி நடைபெற்ற வளாகத்தில், விழுப்புரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது.

விழாக்கோலம்



பெருந்திட்ட வளாகத்தில் பெண்கள் வரைந்த வண்ணமயமான கோலங்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

கோலமிட்ட பெண்களை பொதுமக்கள் பாராட்டியதுடன் சிறந்த கோலங்களை மொபைல் போனில் படம் பிடித்தும், அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தால், பெருந்திட்ட வளாகம், திருவிழா கோலமாக காட்சியளித்தது.

Advertisement