கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனை தயார் உறுப்புகளை தானம் செய்து 'வாழும்' 13 பேர்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கடந்தாண்டில் மூளைச்சாவு நோயாளிகள் 13 பேரிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளனர்.

இம்மருத்துவமனையில் முதல் முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை ஆறாண்டுகளுக்கு முன் ஒரு நோயாளிக்கு நடந்தது. அதன் பின் இதுவரை இதய அறுவை சிகிச்சை நடக்கவில்லை. அதே போல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருந்தாலும் இதுவரை அறுவை சிகிச்சை நடக்கவில்லை.

டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து சிறுநீரகங்கள் பெறப்பட்டு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் உள்ள நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இம்மருத்துவமனையில் மூளைச்சாவு அடையும் நோயாளியிடம் இருந்து சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு உடனடியாக நோயாளிக்கு பொருத்தப்படுகிறது.

பெரும்பாலும் இவர்கள் டயாலிசிஸ் செய்யும் நிலையில் இருப்பதால் மருத்துவமனை அல்லது வீட்டில் தான் இருப்பார்கள். அதனால் நோயாளிகள் உடனடியாக கிடைத்து விடுவர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல முடியும். மூளைச்சாவு நோயாளியிடம் இருந்து கல்லீரலைப் பெறும் போது நோயாளி தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிலநேரங்களில் நோயாளி கிடைத்தாலும் அவருக்கு பொருத்தமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் இங்கு குடல் இரைப்பை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர், பயிற்சி பெற்ற பிற டாக்டர்கள், நர்ஸ், பணியாளர்கள் உள்ளனர்.

கருவிழிகளை பொறுத்தவரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஏற்ப உடனடியாக பொருத்தி சிகிச்சை அளிக்கிறோம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மூளைச்சாவு நோயாளிகள் 13 பேரிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளோம். இதுவரை 39 சிறுநீரகங்கள் மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்தும் 2 சிறுநீரகங்கள் கொடையாளர் மூலம் நேரடியாக பெற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம் என்றனர்.

Advertisement