உயர்ந்தது கட்டுமான பொருட்களின் விலை ஒரு யூனிட்டுக்கு திட்டமிட்ட 'பட்ஜெட்டில்' பற்றாக்குறை ஏற்படும் நிலை
கட்டுமான தொழிலில் மூலப்பொருட்களின் விலை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தற்போது ஜன.1 முதல் கல்குவாரிகளில் தயாராகும் ஜல்லிக்கற்கள், ஜி.எஸ்.பி. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட், டஸ்ட் போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வு செயற்கையாக ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. டிசம்பர் இறுதியில் ஒருவாரமாக ஜல்லி, மணலை விற்பனை செய்யாமல் நிறுத்தி வைத்திருந்து, ஜன.1 முதல் யூனிட்டுக்கு ரூ. ஆயிரம் அதிகரித்து விற்கின்றனர்.
மாநிலம் முழுவதும் இதே நிலை உள்ளதாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.
தனியார் ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: கட்டுமான பொருட்களில் கிரஷர்களில் பெறப்படும் பொருட்கள் மட்டும் குறிப்பிட்ட அளவு விலை அதிகரித்துள்ளது.
இதனால் கட்டுமான பணிகளில் சுணக்கம், பாதிப்பு ஏற்படும். குவாரிகளில் 'டோக்கன்' போடுவதில் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
எனவே இந்த விலை உயர்வு உள்ளது. இனி அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே லாரிகளில் மணலை கொண்டு செல்ல வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த ஆண்டும் இதேபோல டிசம்பர் இறுதியில் குவாரிகளில் விற்பனையை நிறுத்தி வைத்து விலையை யூனிட்டுக்கு ரூ.500 என உயர்த்தினர். இந்தாண்டும் அதேபோல ஒருவாரமாக விற்பனையை நிறுத்திவிட்டு யூனிட்டுக்கு ரூ.ஆயிரம் அதிகரித்துள்ளனர். இதனால் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற கட்டுமான பணிகளில் விலை உயர்வால் எங்களுக்கு லாபம் குறையும்.
புதிய ஒப்பந்தங்களை பெறும்போது கட்டுமானத்தில் சதுரஅடிக்கு ரூ.100 வரை கூடுதலாகும் என்றனர்.
குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில், ''ஜல்லி, எம்.சாண்ட் உட்பட குவாரி பொருட்களுக்கான விலை உயரவில்லை.
அதேசமயம் இவற்றை வெளியில் கொண்டு செல்வதற்கான அனுமதி கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இவ்வாறு நடைச்சீட்டு பெறுவதற்கான தொகையை திடீரென அதிகரித்ததால், அதனை பொருட்களின் மீது சுமத்த வேண்டியதாயிற்று'' என்றனர்.