பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா: கவர்னர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பெஞ்சல் புயலால் மரங்கள் வேருடன் சாய்ந்து இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் 1,040 மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடந்தது.

கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்து, காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் போராட்டத்தில், இயற்கை பேரழிவுகளின் விளைவுகளை சமாளிப்பதில் காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதில் பல்கலைக்கழகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பல்லைக்கழக துணைவேந்தர் (பொ) தரணிக்கரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதுச்சேரி தலைமை வனவிலங்கு காப்பாளர் அருள்ராஜன் கலந்து கொண்டு, பிராந்திய பல்லுயிரியலை பராமரிப்பதிலும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதிலும் காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரி மதிமாறன் நடராஜன், பேராசிரியர் கிளமெண்ட் லுார்ட்ஸ், பதிவாளர் (பொ) ரஜ்னீஷ் புடணி, பேராசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement