'நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, ஒருங்கிணைந்த குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி வசூல் இணையதள சேவை துவக்க விழா நடந்தது.

கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, பணி நியமன ஆணையை வழங்கினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி வசூல் இணையதள சேவையை துவக்கி வைக்கப்பட்டது.

தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் ஜெயந்த குமார் ரே, கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'சிறந்த புதுச்சேரியை உருவாக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கவும், வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 உருவாக்குவதில் புதுச்சேரி மாநிலத்தின் பங்களிப்பை உறுதி செய்யவும் இளைஞர் பட்டாளம் இங்கே வந்திருக்கிறது.

நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியை உருவாக்கும் பணி, தொழில்நுட்பம் தெரிந்த இன்ஜினியர்களின் கையில் தான் இருக்கிறது.

சமீபத்திய புயல் மழையின்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்களின் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது. புதிதாக அரசு பணியில் சேரும் நீங்கள் நடைமுறையில் உள்ள புதிய தொழில்நுட்ப அறிவோடு, இன்னும் தொழில்நுட்ப சிறப்பு துறைகளில் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் ஐ.ஏ.எஸ்., முடித்து பணியில் சேர்ந்தபோது, நாட்டுக்கும், மக்களுக்கும் முடிந்த வரை சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் பிறகு 45 ஆண்டு சேவையில் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பொறுப்பு ஏற்று, அதை நோக்கி பயணம் செய்து வருகிறேன்' என்றார்.

Advertisement