ரூ.100 கோடியில் யானைகளுக்கு புதிய திட்டம்

பெங்களூரு: ''பத்ரா யானைகள் சரணாலயத்தில், யானைகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி உள்ளார்.

அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று அளித்த பேட்டி:

சிக்கமகளூரு பத்ரா யானைகள் சரணாலயம் அருகில் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து தொங்குகின்றன. மின் கம்பிகள் கிடப்பது தெரியாமல் யானைகள் அதை மிதிக்கும்போது உயிரிழக்கின்றன.

எனவே, மின்கம்பிகள் அறுந்து தொங்காமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் யானைகள் உணவு தேடி, கிராமங்களுக்குள் செல்வதால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது. யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கும், பொது மக்களுக்கு ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்கும், பத்ரா யானைகள் சரணாலயத்தில், 'யானைகள் மென் விடுதலை' எனும் பாதுகாப்பான அமைப்பை கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் தேவைப்படும்.

இது குறித்து முதல்வர், நிதி அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும். இத்திட்டத்திற்கு வரும்பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்படும்.

மாநில தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம், புலிகள் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளுக்கு அருகில் வாழும் மலைவாழ் மக்கள் வன விலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்படுவர்.

பெங்களூரில் யானை, மனிதன் மோதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வர்.

கர்நாடகா, கேரளாவை இணைக்கும் பகுதியான பண்டிப்பூர் - வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்வதற்கான தடை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement