'கர்நாடக காங்கிரஸ் அரசு திவால் ஆனது'
ஹூப்பள்ளி : ''சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திவால் ஆகிவிட்டது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆவேசமாக கூறினார்.
கர்நாடகாவில் அரசு பஸ்களின் டிக்கெட் கட்டணம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நேற்று ஹூப்பள்ளியில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:
பொதுமக்களுக்கு ஐந்து வகையான வாக்குறுதிகளை அளித்து, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அரசின் மீது பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைமைக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வந்துவிட்டன.
போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசிடம் பணம் இல்லை. சித்தராமையா தலைமையிலான அரசு திவாலாகிவிட்டது.
காங்கிரஸ் அரசு, பொய்யான உத்தரவாதங்களை கூறி, ஆட்சியில் உள்ளது. இது வெட்கக்கேடான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
பொருட்களின் விலை அதிகரிக்கும் என காங்கிரஸ் அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது போல செயல்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு மக்களை தயாராக இருக்குமாறு வைத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை பல முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
பஸ் டிக்கெட் கட்டணஉயர்வு குறித்து, மக்கள்இரண்டு நாட்களில் மறந்து விடுவர் என காங்கிரஸ் அரசு தப்புக்கணக்கு போடுகிறது. மாநிலத்தில் ஆட்சி நடப்பது போல தெரியவில்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.