'என்னை யாரும் நீக்கவில்லை; நானே தான் விலகினேன்'; மவுனம் கலைத்தார் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா!

2


புதுடில்லி: 'முக்கியமான சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து, என்னை யாரும் நீக்கவில்லை; பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன்' என கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.


சிட்னியில் இந்திய அணியின் 'டிரஸ்சிங் ரூமிற்கு' வெளியே விரக்தியுடன் அமர்ந்திருந்த ரோகித் சர்மாவை பார்க்கவே பாவமாக இருந்தது. கடந்த ஆண்டு 'டி-20' உலக கோப்பையை கம்பீரமாக கையில் ஏந்திய இவருக்கு, இந்த ஆண்டு துவக்கமே சரியில்லை. மோசமான 'பார்ம்' காரணமாக, அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடர் ரோகித் சர்மாவுக்கு 37, சோதனையாக அமைந்தது. 5 இன்னிங்சில் 31 ரன் (சராசரி 6.20) தான் எடுத்தார்.


இது குறித்து, ரோகித் சர்மா அளித்த விளக்கம்: முக்கியமான சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து, என்னை யாரும் நீக்கவில்லை. பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன். மீண்டும் பார்முக்கு திரும்புவேன். என் முடிவை கம்பீர், அகர்கர் ஏற்றுக்கொண்டனர். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது.



ஆஸ்திரேலிய தொடருடன் நான் ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன், அவர்களின் ஆதரவு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு குழு விளையாட்டு, நீங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் சிட்னிக்கு வந்தவுடனே வெளியில் உட்கார முடிவு செய்தேன். எனது எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது, யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement