கோவில் உண்டியலில் ரூ.50 ஆயிரம் திருடிய 3 பேர் கைது

மயிலாடுதுறை: சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தெற்கு கோபுர வாசல் அருகே பழமை வாய்ந்த ஆபத்து காத்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்வதாக கோவில் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.


இது தொடர்பாக, சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முத்து.45, அவரது சகோதரன் கொளஞ்சி.35, விளந்திட சமுத்திரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் இலக்கியன்.29. ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரிய வந்தது.



இதையடுத்து, 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement