விண்வெளியில் முளைத்தது காராமணி; இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிக்கு கிடைத்தது வெற்றி

6


புதுடில்லி: விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட காராமணி விதைகள் 4 நாட்களில் முளைவிட்டுள்ளன.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில், ஸ்பேடெக்ஸ் - பி செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, 476.84 கி.மீ., உயரமுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதை தொடர்ந்து, 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் காராமணி விதைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். ராக்கெட் விண்ணில் டிசம்பர் மாதம் இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்ந்து திட்டம் வெற்றி அடைந்தது. விண்வெளியில் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட காராமணி (தட்டைப்பயிறு) விதைகள் 4 நாட்களில் முளைவிட்டுள்ளன.



இது குறித்து புகைப்படம், ஒன்றை இஸ்ரோ இன்று (ஜன.,04) சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆராய்ச்சிக்காக, பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட காராமணி (தட்டைப்பயிறு) விதைகள் 4 நாட்களில் முளைவிட்டுள்ளன; விரைவில் இலை வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

Advertisement