உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா; கேட்கிறார் குஷ்பு
சென்னை; தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் பா.ஜ.. மகளிர் அணியினர் தடையை மீறி நீதி பேரணி செல்ல முயன்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய மாஜி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், சென்னையில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது;
பாலியல் குற்றங்களில் இது அந்த மாநிலம், இந்த மாநிலம் என்று அரசியலில் கம்பேர் செய்யாதீர்கள். நான் இப்போது தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தை பற்றியே தான் அதிகம் பேசுவேன்.
ஏன் என்றால் இது பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க., என்று எதுவும் கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டு வருகிறோம். இங்கு தமிழகத்தில் அவர்கள் (தி.மு.க,) ஆட்சியில் நடக்கும் போது போராட்டம் பண்ண மாட்டார்கள்.
எதிர்க்கட்சியாக தி.மு.க., இருக்கும் போது என்ன செய்தது? ஸ்டாலின் என்ன கேட்டார். அரசியல் பண்ணாமல் அவியலா பண்ண முடியும் என்றார். அவர் (ஸ்டாலின்) மட்டும் பண்ணும்போது அவியல் செய்வீர்கள். நாங்கள் பண்ணும் போது வேறமாதிரி இருக்கிறதா உங்களுக்கு?
ஏன் உங்களுக்கு (தி.மு.க.,) வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?. என்ன வகையில் நியாயம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.