யூகங்களின் அடிப்படையில் செய்யாதீங்க; டி.ஜி.பி., எச்சரிக்கை!

38

சென்னை: 'அண்ணா பல்கலை., மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, விசாரணை தொடர்பாக யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம்,' என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாணவி போலீசாரிடம் அளித்த புகாரில், ஞானசேகரன், மொபைல்போனில் பேசும்போது சார் என்று மூன்றாம் நபரை குறிப்பிட்டு இருக்கிறார். அவர் யார் என தெரியவில்லை என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதுமட்டுமில்லாமல், இது தொடர்பாக அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், 'யார் அந்த சார்' என்று கேள்வி எழுப்பி நூதன போராட்டங்களையும் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினரிடைமே, ''சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசினார். மொபைல்போன் அழைப்பில் 'மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்' என ஞானசேகரன் யாருடனோ பேசினார்," என்று எல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அண்ணா பல்கலை., மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று டி.ஜி.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுபடி, ௮ண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, செள்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, "கைது செய்யப்பட்ட நபர் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்" சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை ஞானசேகரனிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்", '"திருப்பூரை சேர்ந்த ஒரு நபருக்கும் இதில் தொடர்பிருக்கிறது", என்பன உள்ளிட்டஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுன்றன.

எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வழக்குகள் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொதுவெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இலலாதவையாகும்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.

இவ்வழக்குகளின் தீவிரத்தன்மை மறறும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன் விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்", இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement