கேரள கோர்ட்டுகளில் 20 லட்சம் வழக்குகள் தேக்கம்; நீதி கிடைப்பதில் தாமதம்: மக்கள் கடும் பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரள கோர்ட்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 லட்சம் வழக்குகள் விசாரித்து முடிக்கப்படாமல் தேங்கி உள்ளதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
கேரள முன்னணி நாளிதழ் ஒன்றின் விவரப்படி மொத்தம் இதுவரை 19 லட்சத்து 92 வழக்குகள் தேங்கி உள்ளது. இதில் கேரள ஐகோர்ட்டில் 2ல ட்சத்து 52 ஆயிரம் வழக்குகளும், மாவட்ட, மாஜிஸ்திரேட், முன்சீப் கோர்ட்டுகளில் 17 லட்சத்து 39 ஆயிரம் வழக்குகள் தேங்கி உள்ளன. நாள்தோறும் பதிவாகும் வழக்குகள் அதிகரித்து கொண்டே போவது சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது. 67 ஆயிரத்து 756 வழக்குகள் 10 வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளது . இதில் 36, 693 வழக்குகள் ஐகோர்ட்டிலும், 31 ஆயிரத்து 63 வழக்குகள் கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.
2ல ட்சம் சிவில் வழக்குகளும், 52 ஆயிரத்து 159 வழக்குகளும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. மூத்த குடிமக்கள் பதிவு செய்த வழக்குகள் ஒரு லட்சத்து 32 ஆயிரம், பெண்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரம்.
திருவனந்தபுரத்தில் அதிகம்
மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் அதிகபட்ச வழக்குகள் பதிவானதாக தெரிய வந்துள்ளது. இம்மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரம் , இதில் கிரிமினல் வழக்குகள் 2 லட்சத்து 87 ஆயிரத்து 295. எர்ணாகுளம், கொல்லம் 2வது, 3வது இடத்தை பிடிக்கிறது. வயனாட்டில் மட்டும் 25, 945 வழக்குகள் நிலுவையில் உள்ளது.