ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு; ஒப்பந்ததாரர் தலைமறைவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்,28 என்பவர் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், கடந்த 1ம் தேதி முகேஷ் காணாமல் போகி விட்டதாக, அவரது அண்ணன் யுகேஷ் சந்திரசேகர் போலீஸில் புகார் அளித்தார். மேலும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் ரிதேஷை சந்திக்க சென்ற பிறகு தான் அவர் மாயமானது தெரிய வந்தது.
அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஜன.,3ம் தேதி சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செப்டிக் டேங்கில், முகேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரை தேடி வருகின்றனர். மேலும், அவரது சகோதரர்கள் தினேஷ் மற்றும் ரிதேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள முதல்வர் விஷ்ணு தியோ சாய், "முகேஷின் மரணம் பத்திரிகை மற்றும் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு", எனக் குறிப்பிட்டுள்ளார்.