குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க., அரசு: அண்ணாமலை

13


சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மற்றொரு நபருடன் தொலைபேசியில் பேசியதாக மாணவி புகாரில் தெரிவித்து இருந்தார். தற்போது, சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த மாணவி ' ஞானசேகரன் மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார், ' மீண்டும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க., நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, 'ஏரோப்ளேன்' முறையில் வைத்திருந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், போலீஸ் துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement