பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!

10


சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜன.,17ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருப்பதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 15ம் தேதி திருவள்ளுவர் நாளாகவும், ஜன., 16ம் தேதி உழவர் நாளாகவும் கொண்டப்படுகிறது. இதையொட்டி, ஜன., 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.,17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு வேலை நாளாக இருந்தது.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்பவர்கள், ஜன.,17ம் தேதி அரசு விடுமுறை கிடைக்காதா? என்று எதிர்பார்த்திருந்தனர். காரணம், 17ம் தேதி அரசு விடுமுறை கிடைத்தால், 18 மற்றும் 19ம் தேதிகள், சனி, ஞாயிறு ஆகும். இதனால் தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் கழிக்கலாம்.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் ஜன.,17ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த விடுமுறை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 25ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement