ஆருத்ரா தரிசன விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ஆய்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா ஜன., 13 ல் நடக்கவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார்.
உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜர் சிலையில் பூசப்பட்டுள்ள சந்தனம் ஜன., 12ல் களையப்படும். அன்று முழுவதும் மரகத நடராஜர் சந்தனம் இல்லாமல் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஜன., 13ல் ஆருத்ரா தரிசனத்திற்குப்பின் மீண்டும் மரகத நடராஜர் சிலையில் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். விழாவில் பாதுகாப்பு வழங்கும் பணி, வரிசையில் நிறுத்தி ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்யவும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து எஸ்.பி., சந்தீஷ் மரகதநடராஜர் சன்னதி, மங்களநாதசுவாமி கோயில் பகுதியிலும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.