'கம்யூனிஸ்ட் கட்சிகளை தி.மு.க., 'கவனிக்க' வேண்டும்!'
சென்னை: 'ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த, 25 கோடி ரூபாயை மனதில் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளை தி.மு.க., 'கவனிக்க' வேண்டும்' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர் போராட்டங்களை நடத்தி, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகாமல் பார்த்துக் கொண்டது. போராட்டத்தை மட்டுமே பிழைப்பாக நடத்திக் கொண்டிருந்தவர்கள், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், போராட்டம் நடத்த முடியாமல் வேலையை இழந்து திண்டாடி வருகின்றனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விடம் வாங்கிய 25 கோடி ரூபாய் செலவாகி விட்டதாலும், போராட விடாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளை, தி.மு.க., அரசு தடுப்பதாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், அரசுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வின் கிளை கழகங்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த 25 கோடி ரூபாயை மனதில் வைத்து, கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.