கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வினியோகிக்க ஒத்துழைப்பு தாருங்கள்! வறட்சியை சமாளிக்க உறுப்பினர்களுக்கு நிர்வாகம் சுற்றறிக்கை

ஊட்டி; 'வறட்சி காலங்களில் பசுந்தேயிலை முழுவதையும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோசர்வ்' (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டின் கீழ் 'மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, கைக்காட்டி, மகாலிங்கம், எப்பநாடு, கரும்பாலம், சாலிஸ்பரி,' உள்ளிட்ட, 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில், 25,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள், தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் இலையை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றன.

அதே சமயத்தில், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில், 40 சதவீதம் பேர் , கூட்டுறவு தொழிற்சாலை மற்றும் தனியார் தொழிற்சாலைக்கும் அறுவடை செய்யும் இலையை வினியோகித்து வருகின்றனர்.

நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ



மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் நள்தோறும், 25 ஆயிரம் கிலோ முதல் 40 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யும் இலையை அரைக்கும் அதிநவீன மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக, பசுந்தேயிலைக்கான விலை வழங்கும் பிரச்னையால்,தொழிற்சாலை உறுப்பினர்கள் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நாடி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டுறவு தொழிற்சாலைகளில் எதிர்பார்த்த அளவு இலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஒருபுறம் ஏற்பட்டுள்ளது.

வறட்சியால் குறைகிறது இலை வரத்து



ஆண்டுதோறும் டிச., மாதத்தில் நிலவும் பனிப்பொழிவால் மார்ச் மாதம் இறுதி வரை பசுந்தேயிலை வரத்து படிப்படியாக குறைவது வழக்கம்.

தற்போது, உறைபனி பொழிவு தென்பட்டதால் அறுவடைக்கு தயாரான இலைகளை அவசர, அவசரமாக உறுப்பினர்கள் கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.

ஜன., இரண்டாவது வாரத்தில் இருந்து அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைகள் செயல்படும் பகுதிகளுக்கு ஏற்றவாறு தினசரி, 2,000 கிலோ முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் கிலோ வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்படும்.

இதனால், '3 சிப்ட்' தேயிலை துாள் உற்பத்தி மேற்கொண்டு வந்த தொழிற்சாலைகள், போதிய பசுந்தேயிலை கிடைக்காத பட்சத்தில் ஒரு சிப்ட் அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற நிலையால் உற்பத்தி செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலை நிர்வாகங்கள் திணற வேண்டிய கட்டாயம் உருவாக வாய்ப்புள்ளது.

உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை



பொதுவாக, உறைபனி பொழிவால் இலை வரத்து அடியோடு குறையும் சமயங்களில் பசுந்தேயிலைக்கு விலை உயர்வு ஏற்படும். இதை சாதகமாக பயன்படுத்தும் தனியார் தொழிற்சாலை ஏஜென்ட்கள், கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்களை நாடி சென்று இலைகளை கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில், இதை தடுக்கும் விதமாக, அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை மூலம் விடுத்த வேண்டுகோள் விபரம்:

நமது அனைத்து பசுந்தேயிலை மையங்களிலும், பசுந்தேயிலை கொள்முதல் செய்வதற்கு இலை சேகரிப்பு வாகனங்கள் தொடர்ந்து அந்தந்த கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்த வேண்டும்.

மேலும், வரும் மார்ச் மாதம் இறுதிவரை பனிப்பொழிவு நிலவி வறட்சியான காலநிலை நிலவ வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் தேயிலை வரத்து குறைவாக இருக்கும் என்பதால், உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் பசுந்தேயிலைகளை நமது கூட்டுறவு தொழிற்சாலைக்கு தவறாமல் வினியோகித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement