ரூ.36.73 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தியவர் வங்கதேச எல்லையில் கைது
முர்ஷிதாபாத்: இந்திய- வங்கதேச எல்லையில் ரூ.36.73 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தியவரை எல்லைப்பாதுகாப்பு படை கைது செய்தது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகே ரூ.36.73 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) நேற்று கைது செய்தது. உளவுத்துறை அளித்த தகவலின்அடிப்படையில், தெற்கு வங்க எல்லையின் 146 வது பட்டாலியனின் கீழ் எல்லை அவுட்போஸ்ட் அருகே பி.எஸ்.எப்., வீரர்கள் தங்கம் கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
பி.எஸ்.எப்., படை வீரர்கள் கூறியதாவது:கடத்தல்காரர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்த முயன்றார். நேற்று மதியம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, மதியம் 2.10 மணியளவில், அப்பகுதியில் ஒருவர் புல் வெட்டுவதை கவனித்தோம். சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 467 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மூன்று தங்க பிஸ்கட்கள் மற்றும் ஒரு தங்க நாணயம் அடங்கும்.
கைது செய்யப்பட்ட நபர், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கோஸ்பாடா கிராமத்தைச் சேர்ந்தவர். சார் உதய் நகர் காலனி மற்றும் பார்சிபாடாவில் உள்ள தெரியாத நபர்களுக்கு தங்கத்தை வழங்க பணிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். கடத்தல்காரரும், தங்கமும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.