நேதாஜி மைதானத்தை மேம்படுத்தும் திட்டம்! கருத்துருவுடன் முடங்கியதால் அதிருப்தி
உடுமலை, ;விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், உடுமலை நேதாஜி மைதானத்தில், உள்விளையாட்டு அரங்கம் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம், கருத்துருவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை தளி ரோட்டில், ஆங்கிலேயர்கள் காலத்தில், துவக்கப்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை, மேம்படுத்த, நகரின் மத்திய பகுதியில், 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது.
சுற்றுச்சுவர் உட்பட வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, நேதாஜி மைதானமாக மாற்றப்பட்டது. நடைமுறை சிக்கல்களால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்திலுள்ள மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய பயிற்சிக்களமாக நேதாஜி மைதானம் மாறியது.
தற்போது, மைதானத்தில், ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட விளையாட்டு வீரர்கள், நாள்தோறும் மைதானத்தில் பயிற்சி செய்கின்றனர். மேலும், காலை, மாலை நேரங்களில், நுாற்றுக்கணக்கானோர், நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மைதானத்தில், பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
நீண்ட இழுபறிக்குப்பிறகு, ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளம் மட்டும் கட்டப்பட்டது. பிற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மைதானத்தின் ஒரு பகுதி, புதர் மண்டி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளடக்கிய குழுவினர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், நேதாஜி மைதானத்தில், 6 கோடி ரூபாய் செலவில், உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும்; நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தனியாக நடைபாதை, தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி செய்யவும், மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த தனி 'டிராக்', அமைக்கப்படும்.
இதற்கு தேவையான கருத்துருவை சம்பந்தப்பட்ட துறையினர், உடனடியாக தயாரித்து, சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த, நேதாஜி மைதான மேம்பாடு, விரைவில் நிறைவேறி விடும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து விளையாட்டு வீரர்களிடையே ஏற்பட்டது. ஆனால், அறிவிப்போடு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இத்திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், மழைக்காலங்களில், கூடைப்பந்து மைதானத்தை ஒட்டி, தண்ணீர் தேங்குவதும், ஸ்கேட்டிங் தளத்தின் அருகில், புதர் மண்டி, விஷ ஜந்துகள் நடமாடுவதும் தொடர்கதையாக உள்ளது.
மைதானத்தில், மையப்பகுதியில் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறுவதால், ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.