அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணியர்
வால்பாறை; வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க, சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளாதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக அங்கு பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் இருமாநில சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புத்தாண்டு முதல், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனால், அங்கு இருமாநில சுற்றுலாபயணியரும் ஆர்வத்துடன் சென்றனர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலாபயணியரின் கோரிக்கையை ஏற்று, அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே குளிக்க வேண்டும். வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அவர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்' என்றனர்.