ரசிகர்களின் உள்ளும் புறமும் குளிர்வித்த அசோக் ரமணி
பிரபல கர்நாடக பாடகர் பாபநாசம் அசோக் ரமணியின் இசை கச்சேரி, ரசிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில், சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்தது.
துவக்கமாக, பட்டினம் சுப்ரமணிய அய்யர் இயற்றிய, 'எராநாபை' எனும் வர்ணத்தை, தோடி ராகத்தில் பாடி, ஆரம்பத்திலேயே பக்திக்கு பாதை வகுத்தார்.
பின், நாராயண தீர்த்தரின் 'ஜெய ஜெய' எனும் கீர்த்தனையை அழகாக பாடினார். இதற்கு கற்பனை ஸ்வரங்கள் அருமை.
அடுத்ததாக, அருணகிரிநாதர் அருளிய, 'மாலோன் மருமகனை' எனும் ஸாவேரி ராக விருத்தத்தைத் தொடர்ந்து, பெரியசாமி துாரன் இயற்றிய, 'முருகா முருகா' எனும் கீர்த்தனையை, மிஸ்ரசாபு தாளத்தில் பாடினார். 'செந்தில் மாநகர்' என்ற இடத்தில் நிரவல் செய்தார். தொடர்ந்து, பாபநாசம் சிவன் இயற்றிய 'பராத்பரா' கீர்த்தனையை பாடி அசத்தினார். இதில், 'ஹரி அயனும்' என்ற இடத்தில் நிரவல் செய்து, ஸ்வரங்கள் பாடினார்.
அடுத்து, பைரவி ராகத்தை விரிவாகவும், தீர்க்கமாகவும் ஆலாபனை செய்து, ஷியாமா சாஸ்திரி இயற்றிய, 'காமாட்சி' எனும் ஸ்வர ஜதியை, மிஸ்ரசாபு தாளத்தில் அருமையாக பாட, வயலின் கலைஞர் கணேஷ் பிரசாத் அதற்கு இனிமையை சேர்த்தார்.
இறுதியாக, 'கற்பகமே' எனும் கீர்த்தனையை பாடும்போது, திறந்த அரங்கில் உடலை வருடும் மார்கழியின் 'சில்'லென்ற காற்றும், இசை கலைஞர்களின் 'சில்'லென்ற இசையும் சேர்ந்து, உள்ளும் புறமும் குளிர்ந்தது.
- நமது நிருபர் -