மதுரை பா.ஜ., தலைவரை தேர்வு செய்ய ஓட்டுப்பதிவு

மதுரை; மதுரையில் நகர் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

தமிழகத்தில் பா.ஜ., நிர்வாகத்தில் 66 மாவட்ட தலைவரை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய மாநில மையக்குழு, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்து வருகின்றனர். போட்டியுள்ள மாவட்டங்களில் தேர்தல் நடந்தது. மதுரையை பொறுத்தவரை நகர் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தேர்வு நேற்று நடந்தது.

நகருக்கான தேர்தலில் போட்டியிட மேற்கு மாவட்ட பார்வையாளர்கள் ராஜரத்தினம், கார்த்திக்பிரபு, பொதுச் செயலாளர் டி.எம்.பாலகிருஷ்ணன், மீனவரணி மாநில செயலாளர் சிவபிரபாகரன் உட்பட 19 பேர் விருப்பமனு கொடுத்திருந்தனர். தேர்தல் அலுவலராக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளி செயல்பட்டார். சொக்கிக்குளம் அலுவலகத்தில் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இதில் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், முந்தைய தலைவர், பழைய, புதிய மண்டல தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தேசிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அளவில் பொறுப்பு வகிப்போர் என 72 பேர் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஓட்டளித்தனர். ஓட்டுப் பெட்டி டில்லிக்கு கொண்டு செல்லப்படும். இதில் முதல் மூவரை தேர்வு செய்து, ஆலோசனைக்குப் பின் ஒருவரை மாவட்ட தலைவராக அறிவிப்பர்.

நேற்று மதுரை மேற்கு மாவட்ட தலைவருக்கும் தேர்தல் நடந்தது. கிழக்கு மாவட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு இதுவரை வரவில்லை. மாவட்ட தலைவர்கள் பட்டியலை வரும் ஜன.12 முதல் 15 க்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து மாநில தலைவரை ஜன.20 முதல் 28 க்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது என கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement