ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்ப முடியாது: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

10

புதுடில்லி: மின்னணு ஓட்டு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது எனக்கூறியுள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது எனக்கூறியுள்ளார்.


மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ' இண்டியா' கூட்டணி கட்சிகள், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டின. மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், இதனை தேர்தல் கமிஷன் மறுத்தது.

இந்நிலையில், டில்லியில் இன்று( ஜன.,07) நிருபர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: இவிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முடியும் என்பது ஆதாரமற்றது. அதனை ஹேக் செய்ய முடியாது. முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்பட்டு, பொய் என நிராகரிக்கப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்ற கொள்கையை உறுதி செய்கிறது. பல்வேறு தருணங்களில், இவிஎம்.,கள் மீதான நம்பிக்கையை நீதித்துறையும் உறுதி செய்துள்ளது. இந்த இயந்திரங்கள், தொழில்நுட்ப புரட்சியை பிரதிபலிப்பதுடன், தேசத்தின் பெருமைக்கு உரிய விஷயம் ஆக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement