தொடரும் மர்ம தீ விபத்து; நெல்லிக்குப்பத்தில் மக்கள் அச்சம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தொடரும் மர்ம தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், முஸ்லிம் மேட்டு தெருவை சேர்ந்த பாரூக் என்பரின் வீடு 15 நாட்களுக்கு முன் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது.

அதே பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரின் வீடு கடந்த 3ம் தேதி அதிகாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. அதில், பைக் உள்ளிட்ட பொருட்களும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண்பிரசாத் வீட்டின் கதவு ஜன்னல்களும் எரிந்து சேதமானது.

நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணிக்கு விநாயகம் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் குமார் என்பவரின் வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. திடுக்கிட்ட குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இருப்பினும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.

தொடர் தீ விபத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு முழுதும் கண் விழித்து காவல் காத்துவிட்டு, விடியற்காலை துாங்கச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 5:00 மணிக்கு குமார் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் விரைந்து தீயை அணைத்ததால், ஆட்டோவின் பின் பக்கம் மட்டும் எரிந்து சேதமடைந்தது.

தொடர்ந்து மர்மமான முறையில் தினமும் வீடுகளும் வாகனங்களும் தீப்பிடித்து எரிவதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நெல்லிக்குப்பம் போலீசாரிடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கவுன்சிலர் இக்பால், தனது செலவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.

மர்ம தீ விபத்தை தடுக்க போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement