'உண்மை - நேர்மை இருந்தால் பதவிகள் நாடி வரும்'

3

திருப்பூர், : ''உண்மையுடனும், நேர்மையுடனும் பணியாற்றினால், எந்தப்பதவியும் நம்மை நாடி வரும் என்பதை இளம் வக்கீல்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார் கூறினார்.

கிருஷ்ணகுமாருக்கு அவரது சொந்த ஊரான தாராபுரத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதியாகவும், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாகவும் பணியாற்றிய கிருஷ்ணகுமார், தற்போது பதவி உயர்வு பெற்று மணிப்பூர் மாநிலத்துக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தாராபுரம் பார் அசோசியேசன் சார்பில் நேற்று நடந்த பாராட்டு விழாவுக்கு பார் அசோசியேஷன் தலைவர் கலைச்செழியன் தலைமை வகித்தார். வக்கீல் செல்வராஜ் வரவேற்றார்.

ஏற்புரையாற்றிய கிருஷ்ணகுமார் பேசியதாவது:

உழைப்பும் திறமையும் இருந்தால் நாம் வாழ்வில் உயர முடியும். உண்மையும், நேர்மையும் கொண்டு பணியாற்றினால் எந்த பதவியும் நம்மை நாடி வரும் என்பதை இன்றைய இளம் வக்கீல்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு உதாரணமாக இங்குள்ள நீதிபதிகள் உள்ளனர். இங்கு இன்று இவ்வளவு முக்கியமானவர்கள் அனைவரும் ஒன்று கூடி உள்ளனர் என்றால் அது இறைவன் செயல்.கடந்த 2023ம் ஆண்டில் ஐகோர்ட்டில் நான் பணியாற்றிய ெபஞ்சில், 2019ம் ஆண்டு முதல் முடிவு பெறாமல் இருந்த 2,250 வழக்குகள், சில மாதங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. மணிப்பூர் ஐகோர்ட் நீதிபதியாக எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, இரு நாட்களில் 28 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கினேன். இங்கிருந்து பணி மாறுதல் செய்யப்படும் போது, என் முன், எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், கார்த்திகேயன், மஞ்சுளா, தண்டபாணி, குமரேஷ்பாபு, பாலாஜி, ராமகிருஷ்ணன், வடமலை, அருள்முருகன் உள்ளிட்டோர் பேசினர். கல்லுாரி மாணவர் சேர்க்கை குழு தலைவர் கல்யாணசுந்தரம், பிற்பட்டோர் நல ஆணைய தலைவர் பாரதிதாசன், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் கார்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பார் அசோசியேசன் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

---

தாராபுரத்தில் நடந்த பாராட்டு விழாவில், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார் பேசினார். அருகில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள்.



மண்ணையும், மனிதனையும்

நேசிப்போர் உயர்வது உறுதிமண்ணையும், மனிதனையும் நேசிக்கக்கூடிய மனம் படைத்தவர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் உயர்வு பெறுவர். அவர்கள் உன்னதமான மனிதர்கள். அவர்களை நாடி உயர் பதவிகள் வரும். அதிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவர். அவ்வகையில் நீதிபதி கிருஷ்ணகுமார் நம் கண் முன்பு ஒரு உதாரணமாக உள்ளார்.- மகாதேவன், சுப்ரீம் கோர்ட் நீதிபதி

Advertisement